அமெரிக்காவில் வரும் செவ்வாய்கிழமை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இத்தேர்தல் தொடர்பான சமீபத்திய கருத்துக்கணிப்புகளை சிஎன்என் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஜோ பிடன் 54 விழுக்காடு வாக்குகளையும், ட்ரம்ப் 42 விழுக்காடு வாக்குகளையும் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் கருத்துkகணிப்புகளில் ஹிலாரிக்கு கிடைத்த வாக்குகளைவிட அதிகமாகும்.
ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான மாகாணங்களில் ஜோ பிடனுக்கான மக்கள் ஆதரவு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேபோல குடியரசு கட்சிக்கு சாதகமான மாகாணங்களிலும் பிடன், ட்ரம்பை நெருங்குகிறார்.
பெண்கள் மத்தியில் 61-37 என்றும், வெள்ளை இனம் இல்லாத மக்கள் மத்தியில் 71-24 என்ற வித்தியாசத்தில் பிடன் முன்னணியில் உள்ளார். இருப்பினும், ஆண்கள், வெள்ளை இன மக்கள் மத்தியிலும் ட்ரம்பிற்கே ஆதரவு அதிகமாகவுள்ளது. பொதுவாக குடியரசு கட்சிக்கு ஆதரவானவர்களாக கருதப்படும் வயதானவர்கள் மத்தியலும் ஜோ பிடனுக்கே ஆதரவு அதிகமாகவுள்ளது.
அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்கிழமை (நவ. 3) நடைபெற்றவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி ட்ரம்ப், பிடன் ஆகிய இருவரும் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் வாக்களித்தார்!