அமெரிக்காவில் கரோனா பரவ தொடங்கியபோது, அதைக் கட்டுப்படுத்த டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை அதிபர் ட்ரம்ப் அமைத்தார். நாட்டில் வைரஸ் பரவலைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இந்தக் குழுவின் பொறுப்பாகும்.
இந்தக் குழுவில் அந்நாட்டின் முக்கிய தொற்று நோய் வல்லுநராக அறியப்படும் அந்தோணி ஃபவுசியும் இடம் பெற்றிருந்தார். இருப்பினும், சில வாரங்களிலேயே அதிபர் ட்ரம்பிற்கும் ஃபவுசிக்கும் இடையே மோதல் ஏற்பட தொடங்கியது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஃபவுசி எடுக்கவில்லை என்று கூறிய ட்ரம்ப் தான் மீண்டும் அதிபரானால் அவரை டிஸ்மிஸ் செய்துவிடுவேன் என்றும் தேர்தல் பரப்புரையின்போது கூறியிருந்தார். இருப்பினும், அப்போதிலிருந்தே ஜோ பைடன் ஃபவுசிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில், "கடந்த வாரம் நான் ஃபவுசியை நேரில் சந்தித்தேன். தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநராக தொடர்ந்து பதவியில் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். மேலும், எனது தலைமை மருத்துவ ஆலோசகராகவும் இருக்கும்படி அவரை கேட்டுக் கொண்டேன்" என்றார்.
தொடர்ந்து கரோனா பரவல் குறித்தும் அதைக் கடுப்பட்டுத்துவது குறித்தும் பேசிய அவர், "நான் அதிபராக பதவியேற்கும் நாளில் இருந்து சரியாக 100 நாள்களுக்கு மட்டும் அமெரிக்க மக்கள் மாஸ்க்குகளை அணியுங்கள். வாழ்நாள் முழுவதும் அணிய வேண்டாம், வெறும் 100 நாள்கள் அணியுங்கள். அதுவே கரோனா பரவலைக் கணிசமாகக் குறைக்கும்" என்றார்.
அக்டோபர் மாதம் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஃபவுசி, "அமெரிக்காவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் உடனயாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும்" என்று எச்சரித்திருந்தார்.
அமெரிக்காவில் இதுவரை 6.49 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது' - அமெரிக்க தொற்று நோய் வல்லுநர்