அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முடிவுகள் வெளியிடப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் அல்லாமல் வாக்குச்சீட்டுகளை எண்ணிவருவதால் கடந்த இரண்டு வாரங்களாக அப்பணி நடைபெற்றுவருகிறது.
கலிபோர்னியா, நியூயார்க் போன்ற ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை எந்த அதிபரும் பெறாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அதேபோல், தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களிலேயே ட்ரம்ப்தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
155 மில்லியன் வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ளன. அதாவது, அமெரிக்காவில் 65 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். ட்ரம்பைவிட பைடன் 6 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
பைடன் 290 எலக்டோரல் வாக்குகளையும் ட்ரம்ப் 232 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜார்ஜியா மாகாண முடிவுகள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் பட்சத்தில், பைடனின் எண்ணிக்கை 306ஆக உயரும்.