நியூயார்க்: உலக நாடுகளின் கவனத்தை தன்வசம் ஈர்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரது பரப்புரைகளுக்கான தலைமை இயக்குநராக இருந்தவர் மஜூ வர்கீஸ். இவர், பரப்புரைகளின்போது ஜோ பைடன், கமலா ஹாரிஸ் எவற்றைப் பேச வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் என்பதை கவனித்துவந்தார்.
இந்நிலையில், இவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குநராகவும் நியமித்துள்ளார். இதையடுத்து, வர்கீஸ் வெள்ளை மாளிகை ராணுவத்தினை மேற்பார்வையிடுவார் எனவும், அவருக்கு கீழ் மருத்துவ உதவி, அவசர மருத்துவச் சேவைகள், முதன்மை போக்குவரத்து மற்றும் அதிகாரப்பூர்வ விழாக்கள், நிகழ்ச்சிகளை நிர்வகித்தல் ஆகியவற்றைக் கண்காணிப்பார் எனத் தெரிகிறது.
வர்கீஸ் வெள்ளை மாளிகையில் பணிபுரிவது இது இரண்டாவது முறை. முதல் முறை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிறப்பு உதவியாளராகப் பதவி வகித்துவந்தார். மேலும் அவர் ஒபாமாவின் அமெரிக்க, பிற வெளிநாட்டுப் பயணங்களை நிர்வகித்துவந்தார்.
கேரள மாநிலத்தின் திருவில்லா பகுதியைப் பூர்விகமாகக் கொண்ட இவர், இரண்டாம் முறையாக வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பது பெருமையாக உள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.