கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், அமெரிக்காவை திருப்பி போட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் கரோனாவை எதிர்கொள்ளும் வகையில் புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார்.
கலிபோர்னியா மாகாண அரசின் தலைமை வழக்கறிஞர் சேவியர் பெக்கெராவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் காலங்களில் கரோனா தடுப்பூசிகளை எப்படி விநியோகம் செய்வது என்பது குறித்து கலிபோர்னியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பெக்கெரா கண்காணிக்கவுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள முதல் லத்தின் அமெரிக்கர் பெக்கெரா ஆவார். அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவர் பொறுப்பு மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு தலைவராக உள்ள ரோசெல் வலென்ஸ்கிக்கு வழங்கப்படவுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவராக விவேக் மூர்த்தி பதவி வகித்துவந்தார்.
கரோனா தடுப்பு படை தலைவராக மார்செல்லா நுனேஸ்-ஸ்மித்தை தேர்வு செய்து பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் ஒருங்கிணைப்பாளராக தேசிய பொருளாதார கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெஃப் ஜியண்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைமை மருத்துவ ஆலோசகராக தொற்று நோய் நிபுணர் அந்தோணி ஃபாசி நியமிக்கப்பட்டுள்ளார்.