உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் சீனாவிலிருந்துதான் முதலில் பரவத்தொடங்கியது. இந்நிலையில், வைரஸ் தொடக்கம் தொடர்பாக புலன் விசாரணைகள் மேற்கொண்டு வரும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள், இந்த வைரஸ் சீனாவின் ஆய்வு மையத்திலிருந்து வெளியாகியிருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பியுள்ளன.
இதையடுத்து அமெரிக்க அரசு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் வூஹானின் வைரஸ் ஆய்வு மையத்தில், கள ஆய்வு நடத்த அனுமதி கேட்டு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை சீன அரசு மறுத்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனா இவ்விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை எனவும், இதற்கு உலக சுகாதார அமைப்பும் உடந்தையாக இருந்ததாகவும் அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகிறது.
மேலும், உலக சுகாதார அமைப்பிற்கான நிதியையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 : இரண்டாம் அலைக்குத் தயாராகும் தென் கொரியா !