அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கரான ராஷாத் ப்ரூக் (27) என்ற நபரை அந்நகர காவல் துறையினர் கடந்த வெள்ளி இரவு சுட்டுக்கொன்றனர்.
வென்டீஸ் என்ற பிரபல ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் எதிரே சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளைஞர், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாகவும், காவல் துறை பிடியிலிருந்து தப்பிக்க ஓடியபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அட்லான்டா காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 46 வயது ஆப்ரிக்க அமெரிக்கர் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் போராட்டமாக வெடித்துள்ள சூழலில், தற்போது நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அமெரிக்க மக்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
இதனால் அமெரிக்காவில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என அச்சம் எழுந்துள்ளது. அட்லான்டாவில் இதனை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் தொடங்கிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அட்லான்டா காவல் துறை தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் பதவி விலகியுள்ளதாக அந்நகர மேயர் கீஷா லான்ஸ் அறிவித்துள்ளார். மேலும், ஆப்ரிக்க அமெரிக்க இளைஞரைச் சுட்டுக்கொன்ற காவல் துறை அலுவலரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறை துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அம்மாகாண புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ட்ரம்ப்புடனான திருமணம் குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த மெலனியா