கனடா பிரதமரின் உயிரை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட 22 குற்றத்துக்காக கொரே ஹுரென் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர், இரண்டு ஷாட் கன்கள், ஒரு ரைஃபில், ஒரு ரிவால்வர் என பயங்கர ஆயுதங்களுடன், கனடாவின் தலைமை ஆளுநர் மாளிகையின் முன்கதவுகளை உடைத்துக்கொண்டு டிரக் மூலம் உள்ளே நுழையே முயன்றதாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடம் கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மிக அருகில் உள்ளது. இந்த வீட்டில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பிரதமர் தன் குடும்பத்துடன் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். சம்பவம் நடந்த போது ஆளுநரோ, பிரதமர் ட்ரூடோவே அங்கு இல்லை.
இதுகுறித்து கனடியன் மவுட்டெட் போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கையில், "கனடா ராணுவத்தில் பணிபுரிந்து வரும் கொரே ஹுரென் என்பவர் தடை செய்யப்பட்ட எம்-17 ரைஃபில், ஒரு ஷாட் கன், ஒரு ரிவால்வர் ஆகியவற்றைக் கைவசம் வைத்திருந்தார். ஹுரென் ஓட்டிவந்த டிரக் பாதி வழியிலே நின்றுவிட்டதால் அதிலிருந்து கீழே இறங்கிய அவர், பிரதமர் ட்ரூடோ தங்கியிருக்கும் இல்லம் நோக்கி ஓடியுள்ளார்" என்றார்.
இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த ஆளுநர் மாளிகையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் முகக் கவசம் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு!