உலகளவில் கரோனாவால் 45 லட்சத்து 43 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 14 லட்சத்து 57 ஆயிரத்து 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு அமெரிக்காவில்தான் ஏற்பட்டுவருகிறது.
இப்பெருந்தொற்றால் பல நாடுகளில் வரலாறு காணாத வகையில் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இதன் நிலைமை படுமோசமாக உள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும்விதமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கட்டடப் பணிகள் முடங்கின.
இதன் விளைவாக பல நிறுவனங்கள் லட்சக்கணக்கான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. இந்நிலையில், கரோனா தீநுண்மி காரணமாக வேலை இழந்த 3.6 கோடி பேர் உதவித்தொகைக்காகப் பதிவுசெய்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்தனர். இதன்மூலம், மார்ச் மாதத்தில் 4.4 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாதத்தில் 14.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 1930-களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் தற்போதுதான் இந்த வேலைவாய்ப்பு விகிதம் உயர்ந்துள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மே மாதத்தில் 18 விழுக்காடாக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்களில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட உள்ளன. இதனால், சில கட்டுப்பாடுகளுடன் பெரும்பாலான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் உணவகங்கள், பார்களைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இங்கிலாந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!