அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சர்வதேச புகழ்பெற்ற ஒரு நகரமாகும். பல்வேறு தரப்பட்ட மக்கள் வசிக்கும் இந்நகரில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், நேற்றிரவு நகரின் 13 வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சுமார் 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க் காவல் துறையில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களின் விளைவினால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டினை சாதகமாக்கிக்கொண்டு, சிலர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நியூயார்க் காவல் துறையினர், ஒரே கும்பல் நடத்திய தாக்குதலா அல்லது இதில் பலருக்குத் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.