உலக நாடுகள் கரோனா பாதிப்பை தடுக்க திணறிவரும் நிலையில், ஆப்ரிக்கா நாடுகளின் நிலை தற்போது மோசமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக அல்ஜீரியா, நைஜீரியா, ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகள் தீவிரமான நோய் தொற்றை தற்போது சந்தித்துவருகின்றன.
இந்தச் சூழலில் ஆப்ரிக்க நாடான ஜிம்பாவே விசித்திரமான சிக்கலைச் சந்தித்துவருகிறது. கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், மலேரியா பாதிப்பும் அந்நாட்டில் தீவிரமடைந்துவருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மலேரியாவுக்கும் கரோனாவுக்கும் இடையே சிக்கிக்கொண்டு ஜிம்பாவே செய்வதறியாது தவித்துவருகிறது. கடந்த வாரம் வரை அந்நாட்டில் கரோனா பாதிப்பு பதிவாகாத நிலையில் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டு மூவர் உயிரிழந்தனர். இதனிடையே, ஜிம்பாவேவில் கரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் தக்க மருத்துவ நிதி உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிம்பாவேவில் இம்மாத இறுதிவரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவைத் தடுக்க நைஜீரியாவில் நடக்கும் கொடூரம்