ஜோகன்னஸ்பர்க்: லாங் பைக் டிரைவ் போக ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். தனக்கு பிடித்தமான துணையோடு காரிலோ, பைக்கிலோ நீண்ட தூரம் அலுப்பு தெரியாமல் பயணிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இந்த விருப்பங்களுக்கு தடை போடும் விதமாக சமீபத்திய சாலை குறித்த ஆராய்ச்சி ஒன்று வந்துள்ளது. அந்த வகையில் உலகின் மிக மோசமான சாலைகள் கொண்ட பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இங்கு வாழும் உள்ளூர் டிரைவர்களே தங்களின் வாகனத்தை இயக்க பயப்படுகிறார்களாம். இதில் பலர் முறையான பயிற்சி பெறாமல் வாகனத்தை இயக்குகின்றனர் என்பது தனிக்கதை. இந்தப் பட்டியலில் நம் நாடும் உள்ளது. ஆனாலும் நமக்கு முன்னால் மூவர் உள்ளனர். அவர்களில் இரண்டாம் இடம் தாய்லாந்துக்கும், மூன்றாம் இடம் அமெரிக்காவுக்கும் போய்விட்டது.
நான்காம் இடத்தில் நம் நாடு உள்ளது. இந்தியச் சாலைகளை பொருத்தமட்டில் தற்போது வேகம் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி கொண்ட மிக மோசமான நாடுகளை பார்த்துவிட்டோம்.
இனி பாதுகாப்பான பயணத்துக்கு உகந்த நாடுகளை பார்க்கலாம். இதில் முதலிடத்தில் நார்வே உள்ளது. இங்குள்ள சாலைகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளன. நகைச்சுவை புயல் வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இங்குள்ள சாலையில் சோற்றை போட்டு, குழம்பு விட்டு அப்படியே குழைத்து சாப்பிடலாம்.
அதற்கடுத்த இடத்தில் நார்வேயின் பக்கத்து வீட்டுகாரனான ஸ்வீடன் வருகிறது. மூன்றாம் இடத்தை ஆசிய நாடான ஜப்பான் பெற்றுள்ளது. இந்த ஆய்வை ஜுடோபி என்ற சாலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ளது.