ஜப்பானின் எம்.வி. வாகாஷியோ சரக்கு கப்பலில் நான்காயிரம் டன் அளவு கொண்ட கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதி இக்கப்பல் இந்திய பெருங்கடலில் பயணித்தபோது, மொரிஷியஸ் அருகே பவளபாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கப்பலில் விரிசல் ஏற்பட்டு ஆயிரம் டன் கொண்ட கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
இதன் காரணமாக, மொரிஷியஸ் தீவிற்கு சுற்றுச்சூழல் அவசரகால நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டின் பிரதமர் ஐக்கிய நாட்டு சபையின் உதவியை கோரியுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க சமூக ஆர்வலர்களுடன், பொது மக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்திய கடற்படைக் கப்பல் நிரீக்ஷக் மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிஸை அடைந்துள்ளது. இதுதொடர்பாக கடற்படை செய்தித் தொடர்பாளர், " ஐஎன்எஸ் நிரீக்ஷக், ஒரு சிறப்பு டைவிங் சப்போர்ட் வெசல் ஆகும். இது ஆகஸ்ட் 24ஆம் தேதி லூயிஸ் சென்றது.
இந்த கப்பலினால் எண்ணெய் கசிவை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமின்றி, கடல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பும் வழங்க முடியும். மேலும், எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்த, இந்தியா சுமார் 30 டன் சிறப்பு மாசு எதிர்ப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "மொரிஷியஸில் மீட்பு நடவடிக்கைகளில் உதவ 10 பேர் கொண்ட தொழில்நுட்ப ரெஸ்பான்ஸ் குழுவினரை ஐஏஎஃப் விமானத்தில் இந்தியா அனுப்பியுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய கடற்படை சார்பிலும் 10 சிறந்த ஊழியர்கள் மொரிஷியஸிலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருள்கள், சிறந்த குணங்கள் கொண்ட ஆயுர்வேத மருந்துகளும் சென்றடைந்தது" என்றார்.