கனோ (நைஜீரியா) : நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலத்தின் தாமிசி மாவட்டத்தில் உள்ள சிக்குன் பகுதியில் பெத்தேல் பாப்பிஸ்ட் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.
இந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்துவருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை (ஜூலை 5) அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பள்ளியின் விடுதிக்குள் திபுதிபுவென புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றனர்.
இது குறித்து பள்ளியைச் சேர்ந்த ஜான் ஹயாப் கூறுகையில், “எனது மகனும் இந்தப் பள்ளியில்தான் படிக்கிறான். அவன் கடத்தலில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளான்.
இதுவரை கடத்தப்பட்ட மாணவர்களின் துல்லியத் தகவல்கள் இல்லை. பயங்கரவாதிகளுக்கு பயந்து பலரும் இங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் கிடைக்கவில்லை. விடுதியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்தனர்” என்றார்.
அதேபோல் மாணவிகள் கடத்தப்பட்டனரா என்ற தகவலும் கிடைக்கவில்லை. காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது ஜலிஜே கூறுகையில், “பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் இந்தக் கடத்தல் சம்பத்தை நடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்களின் சரியான எண்ணிக்கை இன்னமும் உறுதியாகவில்லை” என்றார்.
மேலும், “வீடு திரும்பிய 26 மாணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துவருகிறோம்” என்றார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் கடத்திச் செல்வது அதிகரித்துவருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு போகோ ஹரம் பயங்கரவாதிகள் 276 மாணவிகளை கடத்திச் சென்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 17 வயது சிறுமியை கடத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்த இளைஞர் கைது!