கரோனா வைரஸ் அச்சத்தால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், விலங்குகளைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, வேட்டைக்காரர்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து, மருத்துவத் தன்மை கொண்ட காண்டாமிருகத்தின் கொம்புகளை வேட்டையாடிச் செல்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தவும் வனத் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து இயற்கைப் பாதுகாப்பு இயக்குநர் ரிச்சர்ட் விக்னே கூறுகையில், "ஒல் பெஜெட்டா 130க்கும் மேற்பட்ட கறுப்பு காண்டாமிருகங்களின் இருப்பிடமாக உள்ளது. அவற்றைப் பாதுகாப்பதற்கு அதிகச் செலவாகும். ஒரு காண்டாமிருகத்தின் பாதுகாப்பிற்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறோம்.
கோவிட் காலத்தில், சுற்றுலா முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எங்களுடைய வருவாயில் பெரும்பகுதி சுற்றுலாப் பயணிகளை நம்பித் தான் இருந்தது. இந்தப் பேரழிவு காலத்தில் காண்டாமிருகத்தைக் காப்பாற்றுவது பெரும் சவாலாக உள்ளது" என்றார்.
ஆப்பிரிக்காவில் கறுப்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், மார்ச்சில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில், காண்டாமிருகங்கள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'உனக்கு நான் இருக்கேன் நண்பா' - கரோனா போரில் மோடிக்கு உதவும் ட்ரம்ப்!