காபுல் : ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபன் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தாலிபன் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் அறிவித்துள்ளார்.மேலும், பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்துவந்தது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக பயணிக்க தடை விதித்து தாலிபன்கள் உத்தரவிட்டு உள்ளனர். 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தொலைக்காட்சிகளில் பெண்கள் நடிக்கும் தொடர்களை ஒளிபரப்ப ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்தது. அதேபோல், தொலைக்காட்சியில் பங்கேற்கும் பெண் பத்திரிகையாளர்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தடுப்பூசி செலுத்தி நாட்டிற்கு கிறிஸ்துமஸ் பரிசளியுங்கள்; இங்கிலாந்து பிரதமர்