சென்னை: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், நான்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களான நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன், சி.கே. சரஸ்வதி ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டனர். முன்னதாக விமான நிலையத்தில் எல். முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கை ஊன்ற முடியாது கால் ஊன்ற முடியாது, தாமரை வளர வாய்ப்பே இல்லை என அனைத்து எதிர்க்கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றுபட்டு வேலைகள் செய்தன.
அதையெல்லாம் மீறி தற்போது நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை தமிழ்நாட்டில் பெற்றுள்ளோம். மேலும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி வந்துள்ளது.
பாரத பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக டெல்லி புறப்படுகிறோம். மேலும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.