தென்காசி: சங்கரன்கோவில் காந்திநகர் 4ஆம் தெருவைச் சேர்ந்தவர், பெரியசாமி. தற்போது கக்கன் நகரில் வசித்து வரும் இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (38). இவர்களுக்கு வாணீஸ்வரி, கலாராணி என்ற 2 பெண்கள். இருவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
முத்துமாரி ஆடு மேய்த்து வருகிறார். மகள்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு அவர் ஆடு மேய்க்கச்சென்று விடுவது அவரது வழக்கம். அதுபோலத்தான் நேற்றும் அவர் கழுகுமலை சாலையிலுள்ள குப்பைக்கிடங்கு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற கார் அவர் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளின் மீதும் மோதியது.
இதில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது போல அவர் மேய்த்துக்கொண்டிருந்த ஆடு ஒன்றும் சம்பவ இடத்திலேயே பலியானது. மற்றொரு ஆட்டின் கால் முறிந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முத்துமாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இறந்த முத்துமாரியின் மகள் வாணீஸ்வரியும் கலா ராணியும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். இன்று(மே 25) கணிதத் தேர்வை அவர்கள் எழுத வேண்டும் என்பதற்காக தாய் முத்துமாரி இறந்ததை அவர்களுக்குத் தெரியாமல் அவரது தந்தை பெரியசாமியும் உறவினர்களும் மறைத்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு எழுத அருகிலுள்ள நடுவக்குறிச்சி தனியார் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேர்வு எழுதி முடிந்தபின்னர், மகள்கள் இருவருக்கும் தாயின் இறப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
மனைவியின் உடல் பிரேதப் பரிசோதனை கூடத்தில் இருக்கும் போது தனது மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தேர்வு எழுத மகள்களை அனுப்பிய தந்தையின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![விபத்தில் இறந்த தாய் முத்துமாரி(38)](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn02tenthefatherwhosenttowritetheexamtohidethedeathofthemothervissc10063_25052022145401_2505f_1653470641_666.jpg)
இதையும் படிங்க: இரும்புக்கை மாயாவியாக மாறிய பூசாரி.. புலிகளின் காட்டுக்குள் பாரம்பரிய விழா..