தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு
இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும் போது, தனி மனித இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 அறைகளில் எண்ணக் கோரிக்கை
மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவக் குழுவை பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முகக் கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை எனக் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பதில்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "4,900 சதுர அடி மற்றும் 3,400 சதுர அடிகளில் இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை அனுப்பப் போவதில்லை என்றும் 9 அரசியல் கட்சிகளில் ஏழு அரசியல் கட்சிகள் தங்கள் முகவர்களை அனுப்பும். மேலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கண்டனம்
தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, வாக்கு எண்ணிக்கையின் போது தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
"கொலைக்குற்றச்சாட்டு சுமத்த வேண்டும்"
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும் கட்டுப்படுத்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாகக் கூறினர்.
நடவடிக்கை எடுக்க ஆணை
மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதார இயக்குநருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
"அறிக்கை தாக்கல் செய்க"
அன்றையதினம் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.