இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அத்தேர்வுகளை எழுதவிருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், அதில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, நடப்புப் பருவத் தேர்வுகளுக்கான அனைத்துக் கல்லூரிகளும் வசூலித்துள்ள தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை வசூலிப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் அதீத ஆர்வம் காட்டுவது நியாயமல்ல; அது வணிக நோக்கத்தையே காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழகம், அதனுடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களிடமிருந்து ரூ.1200 முதல் ரூ.1750 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முதுநிலை பொறியியல் மற்றும் கணினி பயன்பாடு படிப்புகளுக்கு ரூ. 3,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடப்பு பருவத் தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட இந்த தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்வு நடத்தப்படாத நிலையில், வசூலிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் முழுவதையும் மாணவர்களிடம் வழங்கும்படி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகமே அச்சிட்டு வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் பிற பல்கலைக்கழகங்களும், அவற்றுடன் இணைக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் ஒரு மாணவரிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.375 முதல் ரூ.1000 வரை வசூலித்துள்ளன. சாதாரண கல்லூரிகளில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான்.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேர்வுக் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பிக் கொடுத்தால் அது கல்வி சார்ந்த பிற செலவுகளுக்கு பயன்படும். எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்க அரசு ஆணையிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.