சென்னை: தமிழ் திரையுலகில் புதிய உதயமாக தொடங்கப்பட்டுள்ளது சசிகலா புரடெக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கில் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுவனத்தின் துவக்க விழாவும் நேற்று நடைபெற்றது.
விழாவில், சசிகலா புரடெக்சன்ஸ் சார்பில் சலீம் பேசியதாவது, இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளை பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என கூறினார்
“கா” பட இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது, நான் கா படத்தின் இயக்குநர். இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாசஸூக்கும் நன்றி என்றார்.
“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசியதாவது, ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமலின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பை தந்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என கூறினார்.
தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியதாவது, "திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள். மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றி பெறும். அவர் இடையில் நிறைய சின்ன படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்ன படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன் நன்றி.
ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசியது, தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான். ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசியதாவது, சசிகலா புரடெக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீமிற்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி.
லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசியதாவது, "எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடெக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் கூறியுள்ளோம்.
தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது, "சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: பைரஸி பற்றி விழிப்புணர்வு ...தமிழ் ராக்கர்ஸ் குறித்து அருண் விஜய்