உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் சரத்குமார், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு திரையரங்கில் நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, வரலாற்று நாவலை திரைப்படமாக காண்பது சிறப்பு. கல்கியின் கதை தெரிந்தவர்கள் இத்திரைப்படத்தை எளிதாக அறிந்து கொள்வர். இத்திரைப்படத்தை காண்பவர்கள் கல்கியின் நாவலை காவியமாக கருதுவர். நாவலை படிக்காதவர்களுக்கு திரைப்படத்தால் கதையின் ஓட்டத்தன்மையும், அடிப்படையும் புரிய வரும். நாவலை படிக்காதவர்களுக்கு ஆவலை தூண்டும்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் சிறப்பாக இயக்கி உள்ளார். பாகுபலி சிறந்ததா பொன்னியின் செல்வன் சிறந்ததா என்கிற போட்டியே வேண்டாம். ரசிகர்கள் ஒற்றுமையுடன் படைப்பாளிகளின் படைப்புகளை பார்க்கவேண்டும். கதையை படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று பிரித்து பார்க்காமல் அனைவரும் பார்க்க வேண்டும்.
நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்து உள்ளார்கள் என்று அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்போது உள்ள இளைஞர்கள் அதிக புத்திசாலிகள் கதைகளை படிக்காமலேயே புரியும் தன்மை உள்ளவர்கள் இந்த பகுதி சிறிய கிராம பகுதியாக இருந்தாலும் இங்குள்ள மக்கள் ரசித்து பார்ப்பதே இந்த படத்தின் வெற்றி . மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட சிறப்பாக இருக்கும்.
சோழர்கள் ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும் விதமாக திரைப்படம் அமைந்திருப்பது சிறப்பு. தஞ்சை மண்ணை கண்டு ரசிக்கும் ஆவலை இத்திரைப்படம் தூண்டும் என்பது முக்கியத்துவம். குணச்சித்திரம், கதாநாயகன், வில்லன் என்றில்லாமல் அதன் வேடம்தான் சிறப்பாகும். பல ஆண்டுகளாக திரைப்படத்தை திரையில் காண்பதற்கான எதிர்பார்ப்பு வலுவான வகையில் இருந்தது. தற்போது அதற்கான தருணம் நிறைவேறி இருக்கிறது. வெளிநாட்டவர்களுக்கு தாஜ்மஹாலை காட்டுவதை விட, சோழ நாடு எப்படி இருந்தது என்பதற்கு திரைப்படம் உதாரணம். பொருளாதார பெருக்கம், நீர்வளப்பெருக்கம், வெளிநாடு வணிகம், போரிடுவது எவ்வாறு என்பதற்கு சோழர்கள் ஆட்சி காலமே சான்று.
இத்திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த நான் மிஸ்டர் மெட்ராஸ் என்பது பெருமை. ஆசையை தூண்டும் விதமாக மிக பிரம்மாண்டமாக இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறேன். மற்றவர்களைப் போல் அல்லாமல் ஓரிரு மாதங்களில் அரசியல் குறித்து வியூகம் செய்வேன். இந்தத் திட்டத்தை வகுத்தால் சிறப்பாக மக்களுக்கு செய்ய முடியும் என்ற ஓட்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தியத் தேவன் பிளேபாயா? பொன்னியின் செல்வன் நாவல் கூறுவது என்ன?