சென்னை: பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், பிதாமகன். ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும், இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரது நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது.
இப்படத்திற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை வி.ஏ.துரை தயாரித்து இருந்தார். இவர் பிதாமகன் மட்டுமின்றி, எவர்கிரீன் மூவீஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, என்னம்மா கண்ணு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் இவர் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த வி.ஏ.துரை நேற்று (அக்.2) காலமானார். நீரிழிவு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் உடல் மெலிந்து மிகவும் மோசமாக நிலையில் காணப்பட்டார். கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால், தான் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் உடல் நலம் சரியில்லாமல் இருந்த வி.ஏ.துரை வீட்டிலேயே காலமானார். தற்போது இவருக்கு வயது 69 (7.4.1954). இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது. இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார். V.A.துரைக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கால் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் மருத்துவமனையில் இருக்கும்போது நடிகர் சூர்யா, கருணாஸ் உள்ளிட்டோர் பண உதவி செய்தனர். தற்போது இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.