சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார்.படத்தின் இசை வெளியான நிலையில், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில், “உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
மேலும், இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், ஜூன் இறுதியில் திரைக்கு வரவுள்ள மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, ‘மாமன்னன்’ படமே தனது கடைசி படம்'' எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
'' ‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: Maaveeran: வெளியானது மாவீரன் படப்பிடிப்பு புகைப்படங்கள்!
ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரான, உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி. அப்போது பேசிய உதயநிதி, ''மாமன்னன்’ தான் அவரது கடைசி படம் என அறிவித்தார். இனி நடிக்க மாட்டேன் மற்றும் கமல் தயாரிக்கும் படத்திலிருந்து விலகிவிட்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் ‘ஏஞ்சல்’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த உதயநிதி அவர் சொன்னதைப் போல நடிக்காமல் இருந்தால், படப்பிடிப்பின் 20 சதவீதத்தால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் எனக் கூறினார், தயாரிப்பாளர் ராமசரவணன். தற்போது ‘மாமன்னன்' படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:செங்கலுக்கு புகழ் பெற்றவர் உதயநிதி - அமைச்சர் அன்பில் மகேஷ்