சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், லியோ. மாஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக்.19) உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
இதனால் காலை 9 மணிக்குதான் தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் லியோ வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சென்னையிலும், பல்வேறு முக்கிய திரையரங்குகளில் காலை 9 மணிக்குதான் படம் வெளியானது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் ரோகிணி திரையரங்கில் காலை 9 மணி காட்சி திரையிடப்படவில்லை.
ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பங்குத்தொகை பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், சென்னையின் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு, டிக்கெட் புக்கிங் தொடங்கியது. டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.
மேலும், சென்னை ரோகிணி திரையரங்கில் காலை முதலே திரண்ட விஜய் ரசிகர்கள், லியோ வெளியீட்டைக் கொண்டாட காத்திருந்தனர். ஆனால் காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக எந்த வித கொண்டாடமும் இன்றி திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது. காலை 11 மணிக்குதான் படம் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மேலும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டனர். பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ரோகிணி திரையரங்கில் அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக இருக்கும். ஆனால், லியோ படத்திற்கு எந்த வித கொண்டாட்டமும் இன்றி காணப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். ஒரு தமிழ் நடிகரின் படம் தமிழ்நாட்டில் முதலில் வெளியாகாமல் மற்ற மாநிலங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.