ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் 1989-90களில் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை பேசியப் படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்தப் படம், முதல் நாளிலே ரூ.3.55 கோடியும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் ரூ.167.45 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இந்த நிலையில் அடுத்த தினங்களில் முறையே ரூ.12.40 (திங்கள்கிழமை), செவ்வாய்க்கிழமை ரூ.10.25 கோடி, புதன்கிழமை (மார்ச் 23) ரூ.10.03 கோடி என ரூ.200 கோடியை அதி விரைவில் தாண்டியது.
விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் முதுபெரும் பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்கரபோர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி, பாஷா சும்லி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்தப் படம் வசூலிலும் ரூ.200 கோடியை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் படம், ஜீ5 ( ZEE5) ஓடிடி தளத்தில் மே13ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்து பேசிய நடிகர் தர்ஷன் குமார், “என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். ஜீ5 ஓடிடி தளத்தில் படம் வெளியாவதை நான் முன்னோக்கி பார்க்கிறேன். இந்தப் படத்தை உலகம் முழுக்க இனி பார்க்க முடியும்” என்றார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிடைக்கவுள்ளது. படத்துக்கு உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன. மேலும் மத்திய அரசும் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் படம் ஒரு சாரரை வன்முறையாளராக சித்தரிக்கிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர்கள் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பிரமாண்ட வசூல்.. ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்!