சூர்யா வழங்கும் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்பு நடந்தது. இவ்விழாவில் இசையமைப்பாளர் யுவன் பேசும்போது, "சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ரொம்ப நன்றி. நீண்ட நாள் கழித்து இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி.
2D ராஜா சாருக்கும் நன்றி. படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையாவுடன் எனக்கு இது முதல் படம். படம் சிறப்பாக உள்ளது. அதிதி மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது. இதை கார்த்தியிடமும் கூறினேன்” என்றார்.
’யுவன் மற்றும் கார்த்தி என்ற கூட்டணியின் மேஜிக் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா என அனைத்துப் படங்களின் ஆல்பமும் ஹிட். அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது?’ என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, ”நாங்கள் ஒரே குடும்பம் போன்று தான். பள்ளி முதல் இதுவரை நாங்கள் ஒன்றாகத்தான் பழகியுள்ளோம். இப்போது பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்குள்ளது. எங்களுக்குள் இருக்கும் அன்பும், அதைத் தாண்டிய இறைவனின் அருளும் தான் இந்த வெற்றிக்கு சாத்தியம்.
உண்மையைச்சொன்னால், இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகவேண்டுமென்ற எண்ணத்தோடு நான் இசையமைக்கவில்லை. அனைவருக்கும் பிடிக்கும் ஒரு பாடலாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நினைத்து அமைத்த முதல் பாடல் தான் “கஞ்சாப்பூ கண்ணால”. அந்தப் பாடலுக்கு சித் ஸ்ரீராம் குரல் கொடுத்தார். அதே போல் தான் இதற்கு முன் இசையமைத்த எல்லா பாடல்களுக்கும் குரல் கொடுத்தார்” என்றார்.
'மேலும், உங்களின் பள்ளிப் பருவம் பற்றி?' என்ற கேள்விக்கு, “நான் எப்போதும் முழுமையான சீருடையில் செல்ல மாட்டேன். ஆனால், கார்த்தி எங்களின் ஹவுஸ் கேப்டன். என்னை கண்டதுமே “யுவன் அவுட்” என்று சொல்வார். நானும் ஓகே என்று வெளியில் வந்துவிடுவேன். பின்பு, அந்த பெரிய பள்ளியை மூன்று முறை சுற்றி ஓடி வந்தால் தான் வகுப்பிற்குச்செல்ல முடியும்” என்றார்.
'மேலும், கார்த்தி மற்றும் சூர்யாவை முதலாவதாக பாட வைத்தது நீங்கள் தான் அந்த அனுபவம் பற்றி?' என்ற கேள்விக்கு ”பள்ளி படிக்கும்போது எனக்குத்தெரியாது. ஆனால், பிரியாணி படத்தின்போது கார்த்தியை பாட வைத்தேன். அஞ்சான் திரைப்படத்தில் “ஏக் தோ தீன்” பாடலை சூர்யா பாடினார். மீண்டும் அவரைப் பாடவைத்து விடுவோம்” என்றார்.
'எப்போதும் வித்தியாசமான உடையில் தான் விழாக்களுக்கு வருவீர்கள்? இன்று வேட்டி, சட்டை அணிந்ததற்கு என்ன காரணம்?' என்று கேட்டதற்கு, “மதுரைக்குச்செல்கிறோம். அதனால், நீங்கள் இந்த உடையில் தான் செல்லவேண்டும் என்று என் மனைவி கூறினார். அதனால் தான் இந்த உடை அணிந்து வந்தேன். சமீப காலங்களில் என் உடையை தேர்வு செய்வது என் மனைவி தான். அவரின் தேர்வு சிறப்பாகவும் உள்ளது” என்றார்.
’பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். மதுரையில் எப்போது?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “கூடிய விரைவில் மதுரையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பு தொடங்கியது!