சென்னை: தீபக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விட்னஸ்’. மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது என்று பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் மனிதக் கழிவுகளை தொட்டிக்குள் இறங்கி அகற்றும்போது விஷவாயு தாக்கி பல பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்படம் இதனை கேள்வி கேட்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 9ஆம் தேதி Sony Liv ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தில் ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு படத்தின் இயக்குநர் தீபக் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் தீபக், 'நீண்ட நாட்களாக நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவம் தான் இது. மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது பற்றி இதுவரை படங்கள் வந்ததில்லை. நாங்கள் மக்களை சந்தித்து இந்தப் பிரச்னை குறித்து பேசி 3 ஆண்டுகள் கதை அமைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.
மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் இயந்திரம் அனைத்து இடங்களில் வாழும் மக்களுக்கும் கிடைப்பதில்லை. அதிகமாக கழிவுநீர் தேங்கும் வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் தேங்கும் நீரை அகற்ற அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கான படமாக இருக்கும். மனிதக் கழிவுகளை அகற்ற தனியார் நிறுவனங்களை நம்ப வேண்டியுள்ளது. மத்திய அரசின் சுவச் பாரத் மூலம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்வோரின் மரணங்களுக்கு அரசு தான் தீர்வு காண வேண்டும்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: நடிகர் விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; காரணம் என்ன?