சென்னை: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீ நாத், விதார்த், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் "இறுகப்பற்று". இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் நன்றி அறிவிக்கும் விழா சென்னையில் இன்று (அக்.12) நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விக்ரம் பிரபு, அபர்ணதி, விதார்த் ஆகியோரும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, "இறுகப்பற்று" படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் விதார்த் பேசும் போது, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு எனக்கு வெற்றிவிழா இந்த படம் தான். ஒவ்வொரு படத்துக்கும் இதை எதிர்பார்த்ததேன். நல்ல படமாக மட்டுமே இருந்தது, மக்களிடம் சென்று சேரவில்லை. ஒரு நல்ல படத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். ரசிகர்களும் படம் பார்த்துவிட்டு படம் பற்றி பகிர்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பேசினார்.
அவரை தொடர்ந்து நடிகை அபர்ணதி பேசுகையில், "இந்த படத்தில் நடித்ததற்கு நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படத்தை பார்த்த பலரும் இதுவரை ஒரு குறைகூட சொல்லவில்லை. மனதுக்கு நெருக்கமாக இருந்தது. மேலும் சினிமாவில் வருவதற்கு முன்பு நடிக்க முயற்சித்த காலத்தில் சினிமாவில் என்ன கிழிக்க போகிறார் எனது நண்பர் ஒருவர் கூறினார். அவர் இன்று துபாயில் என் படத்தின் டிக்கெட்டை கிழித்துவிட்டு படத்திற்கு செல்கிறார். அடுத்து எப்பொழுது நல்ல படம் நடிப்பேன் என தெரியாது அப்போது மீண்டும் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசுகையில், "ஒரு படம் பண்ணும் போது வெற்றியை தாண்டி, நன்றி என்று கூறுவது எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. படம் பார்த்தவர்கள் நிறைய மெசேஜ் அனுப்பி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் கோகுல் உண்மையாக பெண்ணாக இருந்தால் கல்யாணம் செய்து கொள்வேன்.
இசை அமைப்பாளர் ஜஸ்டின் மீது பெரிய கோபம். ஒரு வருடமாக எனது போனை எடுக்கவே இல்லை. ஜஸ்டினுக்கு extraordinary talent. மிக சிறிய நேரத்தில் படத்தின் ரீ ரெக்கார்டிங் செய்தது பெரிய விசயம். விக்ரம் பிரபுவுக்கு நடிப்பை தாண்டி பெரிய நன்றி கூற வேண்டும். பல நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தை நிறைய பேர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் விக்ரம் பிரபு ஒத்துக்கொண்டார்.
என் அப்பா, நான் சிறு வயதில் இருக்கும் போது சிவாஜிதான் தாத்தா என்று கூறினார். அவர் என் தாத்தா இல்லை என்று கூறியதும் அழுதுள்ளேன். சண்டை போட்டுள்ளேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பங்களில் நானும் ஒருவன். எங்கள் பூஜை அறையில் இன்னும் சிவாஜி கணேசன் அவர்களின் புகைப்படம் இருக்கும்" என்று கூறினார்.
இறுதியாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "ஆரம்பத்தில் கதை நன்றாக இருக்கிறது என்றால் தைரியமாக படம் பண்ணலாம். சிறிய படம் எடுத்து ஓடவில்லை என்றால், நல்ல படங்கள் எடுங்கள் ஓடும் என்று நான் கூறினேன். என்னை திமிரு பிடித்தவன் என்று கூறினர். நல்ல படம், ஓடுகிற படம் என்ற வித்தியாசம் எனக்கு தெரிய வந்தது.
கரோனாவுக்கு பின் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துள்ளது. ஆனால் இந்த படம் லிமிடெட் ஆடியன்ஸ் உள்ள படம். இந்த படம் ஓடவில்லை என்றால் தியேட்டருக்கு என்று எடுக்கும் சிறு படங்களை எடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தோம். ஆனால் 'இறுகப்பற்று' நம்பிக்கையை காப்பாற்றியது" எனத் தெரிவித்தார்.