சென்னை: இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கி உள்ள ‘ஃபார்ஸி' என்ற கிரைம் த்ரில்லர் தொடர், நடிகர்கள் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இணையத் தொடர்களில் அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஒடிடியில் இத்தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கேவின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த 'ஃபார்ஸி' எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடராக உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் ’ஃபார்ஸி’ இணையத்தொடரின் டிரெய்லர் நேற்று (ஜனவரி 13) பிரைம் வீடியோவில் வெளியானது. அதிகம் அறியப்படாத ஒரு 'காமன் மேன்' உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது.
வழக்கத்துக்கு மாறாக செயல்படும் அனல் தெறிக்கும் மிடுக்கான ஒரு அதிரடிப்படை அதிகாரியாக விஜய் சேதுபதி வலம் வருகிறார். அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளுடன், செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும், ஒரு தெருக் கலைஞனை சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, "குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது.
ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. தொடர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்'' என்றார்.
இதையும் படிங்க: ரசிகர்களுடன் 'துணிவு' படத்தை பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!