சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர். இவரது படங்கள் வெளியாகும் நாள், அவரது ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்படுகிறது. தயாரிப்பாளர்களின் ஆஸ்தான நடிகராக இருக்கும் இவரை வைத்து படம் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டு உள்ளதால், படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
மேலும், அனிருத் இசையில் வெளியான "நா ரெடி தான்" என்ற பாடல், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாடல், வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு இப்போதே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே நிச்சயமாக குட்டி கதை இருக்கும். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி கூறிய கழுகு, காக்கா கதை மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இது விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்தது. இதனால் இதற்கு பதில் சொல்லும் வகையில் விஜய்யின் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, மதுரை அல்லது கோயம்புத்தூரில் நடக்கும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் வழக்கம் போல் சென்னையில் தான் இசை வெளியீட்டு விழா நடக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யின் பேச்சு என்னவாக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Actor vijay: நீண்ட நாட்களுக்கு பின் பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய் - புகைப்படம் வைரல்!