சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ”லியோ திரைப்படம் பார்த்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்” என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், தங்கள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யை தளபதி என்று கூப்பிடச் சொல்லும்போது இவர் ஒருமையில் பேசுகிறார் என்றும், இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இயக்குநர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வடிவமைத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஏற்கனவே, இயக்கம் சார்ந்தோ அல்லது நடிகர் விஜய் சார்ந்தோ தவறான விமர்சனங்கள் இருப்பின் அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் ஐடி விங் அணிக்கு வெளியிட்டிருந்த அறிக்கையில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது. பின்பு அந்த அறிக்கையில் திருத்தம் செய்து, தவறான விமர்சனங்கள் வந்தால் அதை பெருந்தன்மையோடு கடந்து செல்லுங்கள் என்று விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுரை கூறியிருந்தார்.
மிஷ்கின் மேடையோ அல்லது நேர்காணலோ எப்போது பேசினாலும் எல்லோரையும் உரிமையுடன் ஒருமையில்தான் பேசுவதால், இது மிஷ்கினின் பழக்கமாக பார்க்கப்படுவதாகவும் சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இதனை பெரிதுபடுத்தி மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கும் அளவிற்கு சென்று விட்டதாகவும் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பேரரசு படத்தில் அஜித் முதல் ஜப்பான் டப்பிங் வரை.. இந்த வார சினிமா சிதறல்கள்!