தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரம் ஏராளமான சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது. இந்த படங்கள் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கரோனா ஊரடங்கு காரணமாக எந்த படங்களும் வெளியாகவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறிப்பாக எப்போதும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு கூட எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. வரலாற்றில் முதல்முறையாக சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின.
இது ரசிகர்கள் மற்றுமின்றி அப்படங்களின் தயாரிப்பாளருக்கே ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்த நாய் சேகர், குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய், விதார்த்தின் கார்பன், சசிகுமாரின் கொம்பு வெச்ச சிங்கம் டா உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. ஆனால் அனைத்துப் படங்களும் தோல்வியை தழுவின. ரசிகர்கள் திரையரங்கு வர தயங்கியதால் எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் படி வெற்றிபெறவில்லை. தேன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
விக்ரமின் மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. பிப்ரவரி 24ம் தேதி அனைவரும் எதிர்பார்த்துக்காத்திருந்த அஜித்தின் வலிமை வெளியானது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு நோக்கி வந்தனர். ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளை நோக்கி வரவழைத்த படமாக வலிமை மாறியது. அதன் பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ம் தேதி வெளியானது. இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியது.
ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து ரசித்தனர். அதனை அடுத்து விஜயின் பீஸ்ட் ஏப்ரலில் வெளியானது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் விமர்சனத்துக்கு உள்ளானாலும் வசூலில் சாதனை படைத்தது. அதன்பிறகு விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் சிவகார்த்திகேயனின் டான் படங்கள் வெளியாகி திரையரங்குகளை திருவிழா கோலம் ஆக்கின. இரண்டு ஆண்டுகால கரோனா ஊரடங்குகளுக்கு பிறகு திரையரங்குகளில் பொதுமக்கள் வெள்ளம் திரண்டுவந்தனர்.
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது திரையரங்குகள். ஆனால் இத்தனை பெரிய படங்களுக்கு மத்தியில் வாரம் வாரம் சில சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகின. ஆனால் அந்த படங்கள் எல்லாம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருந்தன. கரோனாக்கு பிறகு மக்களின் மனநிலை ரொம்பவும் மாறிவிட்டது. பெரிய படங்கள் மற்றும் பிடித்த நடிகர்களின் படங்களை மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கின்றனர். மற்ற படங்களை ஓடிடியில் வரட்டும் பாத்துக்கலாம் தமிழ் ராக்கர்ஸ் இருக்கிறது டெலிகிராமில் டவுன்லோட் செய்து பாத்துக்கலாம் என்ற மனநிலைக்கு சென்று விட்டனர். மக்களின் இந்த மனநிலை தயாரிப்பாளர் மத்தியில் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலிமை முதல் கடைசியாக வந்த விக்ரம் வரை பொதுமக்கள் கூட்டம் வந்து வெற்றிபெற்றது எல்லாமே பெரிய நடிகர்களின் படங்கள்தான். அதற்கு சமீபத்திய உதாரணங்கள் கேஜிஎப் மற்றும் விக்ரம். ஆனால் அதன்பிறகு வெளியான எந்தவொரு சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றிபெறவில்லை. விமர்சனரீதியாக நன்றாக இருக்கும் படங்களையும் திரையரங்கு வந்து பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. ஒடிடியில் கூட சிறிய படங்களை வாங்குவார் இல்லை.
இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் தயாரிப்பாளர் நிலைமை படுபயங்கரமாகி விடும் என்பதே உண்மை. இத்தகைய சூழலில் வரும் வாரமும் ஏராளமான சிறிய பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நடிகர் யார் என்று தெரியாத படங்கள், என்ன பெயர் என்று தெரியாத படங்கள் என எத்தனையோ படங்கள் வெளியாக உள்ளன.
யோகி பாபுவின் பன்னிக்குட்டி, ஜெய் நடிப்பில் எண்ணித்துணிக, பெஸ்டி, கடுவா, கிச்சு கிச்சு, ஒற்று, நாதிரு தின்னா என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் இந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா அப்படி கிடைத்தாலும் எத்தனை ஸ்கிரீன்கள் கிடைக்கும் ஒரு காட்சியா எல்லது இரண்டு காட்சியா எந்த மாவட்டத்தில் வெளியாகும் என எதுவும் தெரியாமல் படங்கள் வெளியாகின்றன. இதற்கு எல்லாம் எப்போது தீர்வு கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.
இதையும் படிங்க: 100 நாட்களைக் கடந்து வெற்றி நடைபோடும் 'ஆர்ஆர்ஆர்'