சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என பெயர் பெற்றவர் நடிகர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையால் கொடி கட்டிப் பறப்பவர். இவரது படங்கள் தமிழ் கடந்தும் பல்வேறு மொழி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனால் இவரது மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பீரியட் படமான கேப்டன் மில்லர் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகிறது.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்போது தனது 50வது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் அவர் நடிக்கிறார். இந்த படத்தில் தனுசுடன் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்துக்கு நீண்ட தலைமுடி வைத்திருந்த தனுஷ் இந்த படத்துக்காக மொட்டை அடித்துள்ளார்.
இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷ், அமலா பால், சுரபி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. மேலும் வேலையில்லாத இன்ஜினியர் பற்றிய கதை என்பதால் வேலையில்லா பட்டதாரி திரைப்ப்டம் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்தது.
இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் ரகுவரன் பி.டெக் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. அது மட்டுமின்றி தனுஷிற்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை இப்படம் பெற்றுத் தந்தது. தற்போது தமிழில் வெற்றி பெற்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இது தெலுங்கிலும் எதிரொலிக்கிறது.
இங்குள்ள முன்னணி நடிகர்களின் தமிழ் படங்களை அங்கு ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். சூர்யாவின் வாரணம் ஆயிரம், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் தெலுங்கு டப்பிங் படமான ரகுவரன் பிடெக் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
படம் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அதுவும் தெலுங்கில் இருப்பது பிரமிப்பாக உள்ளது. அது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் இதன் வீடியோக்களை பகிர்ந்து ”எங்களை போல் நீங்கள் எங்கள் படங்களை இது போல் கொண்டாட முடியுமா” என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் தனுஷின் அடுத்தடுத்து படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மாற்று தேதி அறிவிப்பு!