இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் அதாவது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இருதரப்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருந்தாலும் மற்றொரு புறம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஏனென்றால் அஜித், விஜய் இருவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டும், அதே நேரத்தில் சில ரசிகர்கள் திரையரங்கில் ரகளைகளில் ஈடுபடுவதும் உண்டு. தனித்தனியாக படம் வெளியானாலே பல்வேறு பிரச்னைகள் வரும். தற்போது ஒரே நாளில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் என்ன செய்வார்களோ என திரையரங்கு உரிமையாளர்கள் பயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏராளமான நாற்காலிகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் முன்னதாக நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே, காவலர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதே போன்று அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியான போது, கோவையில் ஒரு திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மற்றொரு திரையரங்கின் திரை கிழிக்கப்பட்டது. இப்படி தனித்தனியாக படங்கள் வெளியான போதே பல்வேறு பிரச்னைகள் வந்தன. இந்த நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் என்ன நடக்குமோ என திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எனவே, குறிப்பிட்ட சில சர்ச்சைக்கு உள்ளாகும் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்குமா, பிரச்னைகள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தான், திரையரங்க உரிமையாளர்களின் தற்போதைய ஒரே கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: பிரின்ஸ் மூவி ஃபிளாப்: சிவகார்த்திகேயன் இழப்பீடு?