சென்னை: மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு. இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று(டிச.13) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ஆதம் பாலா, இமான் அண்ணாச்சி, இயக்குநர் ராஜ்கபூர், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமீர் "வணங்கான் விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தெரியாமல் கருத்துச் சொல்வது சரியானதல்ல. பாலா ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநர் விமர்சனம் குறித்து பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குஜராத்தில் முறையான தேர்தல் நடக்க வில்லை. அதனால் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பது ஆச்சரியமில்லை. குஜராத்தில் மட்டுமல்ல மத்தியிலும் பாஜக தான் அடுத்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. யாரும் மறுப்பதற்கில்லை. கோவையில் சமீபத்தில் நடைபெற்றது குண்டுவெடிப்பு அல்ல. சிலிண்டர் வெடித்ததாகக் காவல் துறையே சொல்லியுள்ளது. குண்டுவெடிப்பு என்று சொல்வது தவறு. இந்த விவகாரத்தைத் தமிழக அரசு சரியாக கையாண்டுள்ளது.
லஞ்சம் இல்லாத , ஊழல் இல்லாத ஜனநாயக ஆட்சியை அமைப்போம் என்பது 2014க்கு முன்னாடி உள்ள முழக்கம். இப்போது அப்படி கிடையாது. ஒரு மதத்திற்கு ஆதரவா எதிர்ப்பா என்பது இப்போது தேசம் முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல் ஓங்கியுள்ளது. இங்கு இந்துத்துவா எடுபடாது. உதயநிதி அமைச்சராவதை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதி இல்லை.
நாம் தமிழர் தவிர்த்து. உதயநிதி அமைச்சரான பிறகு திரைப்படங்களில் நடிப்பது ஏற்புடையதல்ல. விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சண்டை கலைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கப்படவுள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
நாடு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரு முதலாளிகளுக்கு வசதியாக மாறி வருகிறது. பருத்தி வீரன் இரண்டாம் பாகம் வாய்ப்பில்லை. மொழி திணிப்பை நாம் எதிர்க்கிறோம். அதிகாரத்தைக் கைப்பற்ற மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது” என்றார்.
இதையும் படிங்க: Minister உதயநிதி: விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை - அமைச்சர் அன்பில்