தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர், வடிவேலு. கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, தயாரிப்பாளர்களால் 'ரெட் கார்டு' போடப்பட்டு சில காலம் நடிக்காமல் இருந்தார் எனவும் கூறப்பட்டது. தற்போது, அந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்,'வைகைப்புயல்' வடிவேலு.
இந்நிலையில், சமீபத்தில் அவர் மீண்டும் ‘கம் பேக்’ கொடுக்கிறார் என்ற செய்தி வந்ததிலிருந்தே ‘மீம்ஸ்கள்’ பறந்து வருகின்றன. அத்துடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.
அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு வடிவேலு மீது ஒரு பெரிய டவுட் இருந்து வந்தது. இவர் சரியாக படப்பிடிப்புக்கு வருவாரா..?, படத்தை முடிச்சு தருவாரா..? அல்லது மறுபடியும் வாய் வம்பு பேசி படத்தை கெடுத்து விடுவாரா...? என்பது போன்ற வழக்கமான வடிவேலு படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கே கேள்விகள் எழுந்தன.
ஆனால், ஒழுங்காக ஷூட்டிங் வந்து லைகாவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தையும் முடித்து கொடுத்திருக்கிறார், வடிவேலு. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தான் இருக்கிறதாம். வடிவேலுவும், ஷிவானியும் நடிக்கும் மான்டேஜ் பாட்டு தான் அது. அது மட்டும் முடிந்தால் படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராம்.
ஆக ஒரு காலத்தில் வடிவேலுவைப் பார்த்து பயந்து ஓடிய எல்லா தயாரிப்பாளர்களிடமும், அவரின் பட காமெடியில் வருவது போல் 'நான் முன்ன மாதிரி இல்ல Sir.., திருந்திட்டேன்..!' என நடந்துகொண்டு வருகிறாராம், வடிவேலு. இதனால் தயாரிப்பாளர்கள் அனைவரும் தற்போது வடிவேலுவை வைத்து படம் எடுக்கும் முனைப்பில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'நான் உனை நீங்கமாட்டேன்..!' - ட்விட்டரில் இளையராஜா யாரைக் குறிப்பிட்டார்?