சென்னை: கடந்த ஜனவரி 20 ஆம் தேதி நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் மற்றும் பள்ளி குழந்தைகள் பாடிய வந்தே... மாதரம் பாடல் வெளியாகி இரண்டு உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றது. இந்த பாடலை டி.ராஜேந்தர் இசையமைத்துப் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை கொண்டாடும் வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் டி.ராஜேந்தர் பாடல் பாடிய பள்ளி குழந்தைகளுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் கூறியது, "குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும். தட்டி விட்டு வளர்க்கக் கூடாது. குழந்தைகளுக்குள் இருக்கும் திறமை படைத்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆகையால் குழந்தைகளை உற்சாகத்தோடு ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், பத்து தல (pathu thala) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இராவணனுக்கு பத்து தலை. பத்து தலை என்றால் அத்தனை திறமை என்று பொருள். இன்று டி.ராஜேந்திரனுக்கும் அத்தனை கலை. நான் ராமர் பக்தனாக இருந்தாலும் எனக்கு ராவணன் தான் பிடிக்கும். ஏனென்றால் சீதையின் கற்பு கணலை அவன் தொடவில்லை என தெரிவித்தார்.
அதன் பின், நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாதது வேதனை அளிக்கிறது. அதற்குள்ளே 50 ஆயிரம் பெற்றோரின் கண்ணீர் இருக்கிறது. என் மகன் சிலம்பரசனை நடிக்க வைத்தாலும் கூட, படிக்க வைத்துத் தான் நடிக்க வைத்தேன் என்றார்.
தற்போது டாஸ்மாக் கடையில் கிடைக்கும் மது உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிறது. ஊதுகின்ற சங்கைத் தொடர்ந்து ஊதுவோம். மது விலக்கு பிரசாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வேன். டாஸ்மாக் இல்லை என்றால் அரசாங்கம் கவிழ்ந்துந்து விடும் என குடிகாரர்கள் பிரசாரம் செய்து கொண்டும், பல்லு கூட விளக்காமல் காலையிலேயே டாஸ்மாக் கடையின் முன்னால் காத்துக் கொண்டிருந்தால் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் ஜூலை மாதம் புதிய படத்தை தொடங்குகிறேன், அதற்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அடுத்த வாரம் ஹைதராபாத் சென்றும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளேன். நான் முதலில் எம்.ஜி.ஆரின் ரசிகன் அதற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் என கூறிய டி.ராஜேந்தர், இரண்டு தண்டவாளம் போல் கமல் மற்றும் ரஜினி ஆகிய இரண்டு பேரின் தீவிர ரசிகன் நான் என்றார்.
விக்ரம் படம் இந்திய திரையுலகம் திரும்பி பார்த்த படம். நான் இப்போது படம் எடுக்க நினைப்பதே கமல் மற்றும் ரஜினியை முன்னோடியாக நினைத்து தான். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை மாற்றியதால் என்னால் தேர்தலில் நிற்க முடியவில்லை. அன்று மதியை நம்பியவன் இன்று விதியை நம்புகிறேன். விதியின்படி தான் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும். அதை ஏற்று கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா!