திருநெல்வேலி: தமிழ் சினிமாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' ட்ரெய்லர் நேற்று (ஏப். 2) வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் நெல்சன் தீபக்குமார் இயக்கியுள்ளார். இயக்குநர் செல்வராகவன், நடிகை பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. மேலும், டிரலைரை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
திரையரங்கில் ட்ரெய்லர்: நெல்லை மாவட்டத்தில் உள்ள நான்கு திரையரங்குகளில் நேற்று 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் இலவசமாக திரையிடப்பட்டது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கில் சென்று ட்ரெய்லரை கண்டு ரசித்தனர். குறிப்பாக, நெல்லை சந்திப்பு - மதுரை சாலையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கில் விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் 'பீஸ்ட்' ட்ரெய்லரை காண திரண்டனர்.
முன்னதாக, அவர்கள் திரையரங்கிற்கு வெளியே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ட்ரெய்லர் முடிந்தபிறகு திரையரங்கிற்குள் ரசிகர்களிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, திரையரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகள் சேதமானது போன்றும், திரையரங்கின் வெளியே கண்ணாடிகள் உடைந்து கிடப்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.
வெறும் ட்ரெய்லருக்கே இப்படியா?: இதுகுறித்து, திரையரங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டநெரிசலில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. புகார் கூறும் அளவுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், வெறும் ட்ரெய்லருக்கே திரையரங்கை தெறிக்க விடும் அளவுக்கு நடந்து கொண்ட ரசிகர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'நான் அரசியல்வாதி இல்லை, 'சோல்ஜர்'..!' - பீஸ்ட் ட்ரெய்லரில் விஜய்