சென்னை: இந்த வார வெளியீடாக தமிழ் திரையுலகில் இன்று (ஜூலை 21-ம் தேதி) ஒரே நாளில், ஒரு ரீ-ரிலீஸ் படம் உள்பட 6 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய் ஆண்டனியின் கொலை, அர்ஜூன் தாஸின் அநீதி, பிரேம்ஜியின் சத்திய சோதனை, ஸ்ரீகாந்த்தின் எக்கோ மற்றும் ரியாஸ் கானின் இராக்கதன் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ நடித்த 'வசந்தமாளிகை' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று (ஜூலை 21) ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
கொலை: விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்ந்து விடியும் முன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி குமார் இயக்கத்தில் 'கொலை' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 1020 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ளது கொலை திரைப்படம்.
அநீதி: எளிய மனிதர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வரும் இயக்குனர் வசந்தபாலன். இவரது இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துசாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அநீதி' திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படமும் வசந்தபாலனின் வழக்கமான படமாக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் சற்று வன்முறை தூக்கலாக அமைந்துள்ளது.
சத்திய சோதனை: ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தில் கதாநாயகனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காவல்துறையினரின் உண்மை முகத்தை காமெடி கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர்.
மேலும் ஸ்ரீகாந்த் நடிப்பில் 'எக்கோ' மற்றும் ரியாஸ் கானின் 'இராக்கதன்' ஆகிய படங்களும் இன்று திரைக்கு வந்துள்ளன. இதுதவிர, காலத்தால் அழியாத காவியப்படமான 'வசந்தமாளிகை' வெளிவந்து 50 வருடங்களாகிறது. சுமார் 200 நாட்களைத் தாண்டி வெற்றி விழா கண்ட இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா, பண்டரிபாய், ரமாபிரபா, ஹெலன், ஏ.சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தற்போது 'வசந்தமாளிகை' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஹாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டோபர் நொலனின் 'Oppenheimer' திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் Oppenheimer படம் பார்க்க சிறந்த தியேட்டர் எது? ஒரு சிறப்புப் பார்வை!