தென்காசி: தனுஷ் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் 'கேப்டன் மில்லன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மூலம் வனவிலங்குகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் மூலம் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடையம் தோரணமலை அதனை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பல இடையூறுகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர் ராமு உதயசூரியன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி கிராமத்தில் அமைந்துள்ளளது பழைய குற்றாலம். இங்கு மலையிலிருந்து விழும் அருவி நீரில் மக்கள் தினமும் நீராடி வருகின்றனர். இந்த அருவியில் விழும் தண்ணீர் மூலம் விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதில் செங்குளம் கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எங்கள் பகுதியிலுள்ள சுமார் பதினைந்து குளங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.
இதில் மத்தளம்பாறை கிராமத்தில் உப்பினாங்குளம் அருகில் உள்ள பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக இவர்கள் மிக பிரமாண்டமான கோயில் அமைப்பு கொண்ட செட் ஒன்றை உருவாக்கியும் அதன் முன்பு ஓலை குடிசைகளினால் சிறிய கிராமம் போன்ற தோற்றத்தையும் உருவாக்கி உள்ளனர். தீயிடும் காட்சிகள் எல்லாம் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பயன்படுத்தும் இந்த பகுதி வனத்துறையின் காப்புகாட்டுப் பகுதியிலிருந்து 10 கி.மீ வரை உள்ள வெளிமண்டல பாதுகாப்பு பகுதியாகும். இங்கு படப்பிடிப்பு நடந்த வனத்துறையிடம் பெறவேண்டிய தடையில்லா சான்று பெறாமல் படப்பிடிப்பை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த படப்பிடிப்பிற்காக இவர்கள் அதிக கதிர்வீச்சு கொண்ட ஒளியை உருவாக்கும் ஹைமாஸ் மின் விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால் மிளா, மான், யானை, புலி, காட்டு முயல் போன்ற மிருகங்கள் கலைந்தோடி தனியார் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், உயிருக்கு அச்சம் விளைவித்தும் வருகின்றன. மேலும் முக்கியமாக இது யானைகளின் வழித்தடம் என்பதால் கீழே குடி நீருக்காகவும், பசுமை உணவுகளுக்காகவும் இறங்கி வரும் யானைகள் மீண்டும் மலைக்கு செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
அப்படி ஒரு யானை கடந்த 15 நாட்களாக திரவியநகர், கடவாக்காடு, தோரணமலை, மத்தாளம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்து தென்னை, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே வன உயிரினங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறான இடத்தில் வனத்துறையின் வெளிமண்டல பாதுகாப்பு பகுதியில் நடைபெற்று வரும் இந்த படபிடிப்பை நிறுத்திடவும், யானைகள் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டுள்ள அரங்க அமைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் தென்காசி மாவட்டம் நிர்வாகம் படப்பிடிப்பிற்கு தடை விதித்திருந்த நிலையில், ஒரு சில சமூக தளங்களில் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நிர்வாகம் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கவில்லை என வெளியான இந்த வதந்தி தகவலுக்கு தென்காசி மாவட்டம் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Farhana: ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!