சென்னை: 2023ஆம் வருடம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழ் திரையுலகம் இந்த வருடம் பல்வேறு திரை நட்சத்திரங்களை இழந்துள்ளது. மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட பிரபல கலைஞர்களின் திடீர் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அப்படி இந்த ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்த திரைப் பிரபலங்களின் பட்டியலை பார்க்கலாம்.
பீஸ்ட், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகை சுப்புலட்சுமி, வசனகர்த்தா ஆர். வேலுமணி, ஜுனியர் பாலையா, மதுரை மோகன், வி.ஏ.துரை, 'என் உயிர்த் தோழன்' பாபு, ஆர்.எஸ்.சிவாஜி, எடிட்டர் ஆர்.விட்டல், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ஜெயக்குமார், கலை இயக்குநர் சுனில் பாபு, இயக்குநர் கே.விஸ்வநாத் மற்றும் கலை இயக்குநர் மிலன்.
அதேபோல் சரத்பாபு, மயில்சாமி, கஜேந்திரன், மனோபாலா, மாரிமுத்து, சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம், அங்காடித்தெரு சிந்து, அவன் இவன் பட பிரபலம் கே.ராமராஜ், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான ரா.சங்கரன் ஆகியோர் இந்த ஆண்டு உயிரிழந்தனர்.
இவர்களில் நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சரத்பாபு, கடைசியாக போர் தொழில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
நடிகர் சரத்பாபுவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மே 22ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, இயற்கை பேரிடர் காலங்களில் தனது பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.
இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார். சீரியல் டப்பிங்கின்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நடிகர் மாரிமுத்து உயிரிழந்தார். இரண்டு படங்களை இயக்கி இருந்தாலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் சென்றடைந்ததார்.
மாரிமுத்துவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களை மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக வந்து இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: உலகம் முழுவதும் வெளியானது டன்கி.. பதான், ஜவான் வரிசையில் அடுத்த பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறுமா?