சென்னை: ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.டி சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி தயாரிப்பில், இயக்குநர் மா.வெற்றி இயக்கத்தில் உருவாகும் ஆக்சன் படத்தில், பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் விதமாக, படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
இந்நிகழ்வில் பேசிய ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர், "நான் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளேன், விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது. நானும், எனது நண்பர் சௌத்ரியும் இணைந்து பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரமாண்ட ஆக்சன் படம் எடுக்க வேண்டும் என பேசி வந்தோம்.
இந்தியாவில் வெற்றிப் படமாக அமைந்த பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்பட ஏராளமான படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது. அவரை கெளரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளோம். படம் மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணிக் கலைஞர்களுடன் உருவாகவுள்ளது. விரைவில் அது பற்றிய தகவல்களை அறிவிப்போம்" என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய எம்.டி சினிமாஸ் தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி, “எங்களுக்கு இயக்குநர் வெற்றியை ரொம்ப காலமாக தெரியும். சினிமாவில், மொழிகளைத் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்சன் படம், காமெடிப் படம். அந்த வகையில், பீட்டர் ஹெயினை வைத்து பெரிய ஆக்சன் படம் தயாரிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இப்படத்தின் இயக்குநர் மா.வெற்றி கூறும்போது, "எனக்கு ஹாலிவுட் படங்கள் மீது அதிக விருப்பம், அதேபோல ஒரு தமிழ்ப்படம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஒரு கதை எழுதினேன். மாஸ்டர் நடித்தால் நன்றாக இருக்குமென்று அவரை அணுகினேன், என்னிடம் கதை கேட்டார். உடனே நடிப்பதாகச் சொல்லி, படத்திற்காக அவரே நிறைய விஷயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்படத்தில் மாஸ்டருடன் இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி" என்று பேசினார்.
அவரைத் தொடரந்து பேசிய படத்தின் நாயகன் பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன், "இயக்குநர் வெற்றி, முதலில் ஒரு ஐடியாவாகத்தான் இதைச் சொன்னார். பிறகு நான் நடிக்க வேண்டும் என்று கூறினார். நீங்கள்தான் இப்படத்திற்குப் பொருத்தமாக இருப்பீர்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.
மேலும், இப்படத்தில் தான் காட்டுவாசியாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க, தான் தனியாக பயிற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்த அவர், படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை படக்குழு அணுகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், படத்தில் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும், அது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை பாகம் 1!