சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் நடித்து வந்தவர் அதனை தொடர்ந்து ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். மேலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ(Leo) படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கரோனா காலத்தில் வெளியானாலும் நல்ல வசூல் பெற்றது. ஆனால் மாஸ்டர் படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரது ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றம்தான். இதனால் தற்போது லியோ படத்தை மிகப் பெரிய அளவில் எடுத்து வருகிறார்கள். லியோ படம் எனது 100 சதவீத படமாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் படங்களை போலவே அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காரணம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் பேச்சு. இதனை காண ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். ஏற்கனவே நடந்த படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுக்கள் வைரல் ஆகின.
இந்த நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாது என்று தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரை அல்லது கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது அரசியல் ஆசையில் உள்ளார். தனது மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை தங்களது தொகுதிகளின் தகவல்களை பெற உத்தரவிட்டுள்ளார். இதனால் தென் தமிழகத்தில் தனது ஆதரவை பெற லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரை அல்லது கோவையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக தென் மாவட்டத்தில் இந்த ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: PS 2: பொன்னியின் செல்வன் பாகம் 2: முன்கதையை விவரிக்கும் கமலின் குரல்!