சென்னை: தமிழ் திரைப்படத்தில் முதல் திரைப்படத்தின் மூலமே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கள், சிலரே. அந்த வரிசையில் நடிகர் கார்த்தியும் கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி இடம் பிடித்தார். ஆம், அன்றுதான் இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்படப் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்தி 'பருத்திவீரன்' ஆக மாறினார்.
மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் தந்தைக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்படும் தாய்க்கும் பிறந்தவர்தான், இந்த பருத்திவீரன். பெற்றோரை இழந்து சித்தப்பா உடன் சேட்டையிலும், பாட்டியின் அரவணைப்பிலும் வாழ்ந்து வரும் பருத்திவீரனை காதல் கொள்ளும் அத்தை மகளின் காதல் கைகூடுகிறதா என்பதை எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிய வைத்திருப்பார், இயக்குனர் அமீர்.
அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலில் வெளிவந்த ‘அறியாத வயசு..’ என்ற பாடலுக்கு உருகாத ஆட்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், யுவன் சங்கர் ராஜாவின் கிராமிய இசைக்கு இப்படம் முக்கிய விதையாக மாறி இருந்தது. மேலும் இதில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது, திரைப்படத்தை மேலும் மெருகேற்றியது.
மேலும் பருத்திவீரனின் திரைக்கதை புத்தகமாக வெளி வந்தபோது அதன் முன்னுரையில், ‘இத்திரைப்படத்தை நான் எடுத்திருக்கவேக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பேன். அப்படம் எனக்கு அங்கீகாரம், அடையாளத்தைக் கொடுத்தாலும், ஒரு மனிதனாய் எனக்கு எந்த சந்தோஷத்தைத் தரவில்லை.வலிகளை மட்டுமே தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நான் கிராமத்தில் பிறந்து வளரவில்லை. ஆனால், என் நண்பர்கள் பலர் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் வாழ்க்கையை வலியை உள்வாங்கி எடுத்ததுதான் இந்த பருத்திவீரன்’ என்று சிலாகித்தார், இயக்குனர் அமீர். இப்படியான திரைப்படைப்பு வெளிவந்து இன்றுடன் 16 ஆண்டுகள் முடிவடைந்தது மட்டுமல்லாமல், நடிகர் கார்த்தியின் சினிமாப் பயணமும் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பதுதான் டாப் ஹைலைட். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பல திரைப்பிரபலங்கள் கார்த்திக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ராத்திரி... சிவராத்திரி...' சிவராத்திரியில் அமலாபால் செய்த பூஜை!