சென்னை: இந்திய திரை உலகை தனது நவரச குரலால் அரை நூற்றாண்டு காலம் கட்டி ஆண்டவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். எத்தனையோ பாடல்களில் நம்மை மயக்கிய இந்த 'பாடும் நிலா' நம்மை விட்டு பிரிந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் எஸ்பிபியையும் கொண்டு சென்றுவிட்டது.
கலைத்துறையில் கடந்த 1966 முதல் கிட்டத்தட்ட 16 மொழிகளில் தனது ஆளுமையை நிலை நாட்டி வந்தார் எஸ்பிபி . ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் பிறந்து வளர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். முதலில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அவரது அதிகபட்ச கனவாக இருந்தது.
ஜானகியால் கண்டறியப்பட்ட இசைக் குயில் : பின்னர் பாடகி ஜானகியால் எஸ்.பி.பியின் திறமை கண்டறியப்பட்டு, சினிமாவில் பாடகராக வாய்ப்பு தேட ஆரம்பித்தார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா' என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார். தமிழில் முதல் முறையாக எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் பாட இருந்தார்.
ஆனால் அவரது தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு எம்எஸ்.விஸ்வநாதன் ஆலோசனையால் தீவிரமாக தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் உச்சத்தை தொட்டார். எம்ஜிஆர் தொடங்கி இப்போது உள்ள நடிகர்கள் வரை அனைவருக்கும் பாடல் பாடிய வித்தகன்.
இசையின் நவசர நாயகன் : காதல், வீரம், சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் தனது குரலில் இயல்பாகவே கொண்டவார். பாடலுக்கு நடுவே இவர் கொடுக்கும் சிணுங்கல் குரலும், சிரிப்பும் யாருக்கு தான் மறக்கும். பாடலுக்கு தகுந்தார் போல் ஏற்றி இறக்குவார். 'உன்ன நெனச்ச பாட்டு படிச்சேன்' என அவர் உருகினால் நமக்குள்ளும் காதல் தோல்வி வந்த உணர்வு ஏற்படும்.
'இளமை இதோ இதோ' என்று பாடினால் நமக்குள் புத்தாண்டு கொண்டாட்டம் குடிகொள்ளும். சோகத்தையும் நமக்கு சுகமாக கொடுக்க தெரிந்த கலைஞன் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஏராளமான மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தென்னிந்தியாவின் ஜாம்பவான் : அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே பின்னணி பாடகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவரே. டப்பிங் கலைஞராகவும் பல சாதனைகளை படைத்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், பாக்யராஜ், மோகன், அனில்கபூர், ஜெமினி கணேசன், அா்ஜுன், நாகேஷ், காா்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் டப்பிங் பேசியுள்ளார்.
ரஜினி படங்களுக்கு தெலுங்கில் பெரும்பாலும் இவர்தான் டப்பிங். இசை அமைப்பாளர், இயக்குநர் எனவும் தனது கலை தாகத்தை தணித்துக் கொண்டார். 'கேளடி கண்மணி' படத்தில் வரும் 'மண்ணில் இந்த காதல் இன்றி' பாடலை மூச்சு விடாமல் பாடினார். இப்படி எண்ணற்ற சாதனைகளை படைத்த மாபெரும் கலைஞன் எஸ்பிபி.
70 முதல் 2K கிட்ஸ் வரை ரசிகர் பட்டாளம் : 70களில் தொடங்கி இன்றைய 2கே கிட்ஸ்கள் வரை இவரது பாடல்கள் சென்று அடையாத இடம் இல்லை. பல இசையமைப்பாளர்கள் தன்னுடைய இசையில் எஸ்பிபி ஒரு பாடலாவது பாடிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவருக்காக பாடல்களை உருவாக்கினர். அப்படி வித்யாசாகர், தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, ஏஆர் ரகுமான் இப்படி பட்டியல் நீளும்.
ஏஆர் ரகுமான் இசை அமைத்த மின்சார கனவு படத்தில் பாடிய 'தங்கத் தாமரை மலரே' பாடலுக்கு முதல்முறையாக தமிழில் தேசிய விருது பெற்றார். அதே போல் நடிகர் ரஜினிக்கு அறிமுக பாடல் பாட வேண்டும் என்றால் அது இவரது குரல்தான் முதல் சாய்ஸ். ஏராளமான படங்களில் ரஜினிக்கு அறிமுக பாடல் பாடியுள்ளார்.
இசை மட்டுமின்றி நடிப்பிலும் இவர் அரக்கன் : அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சிவாஜி கடைசியாக அவர் மறைவதற்கு முன் பாடிய அண்ணாத்த படத்தில் 'அண்ணாத்த அண்ணாத்த' என்ற பாடல் வரை இந்த பட்டியல் நீள்கிறது. ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித்திற்கு நிறைய பாடல்கள் பாடியுள்ளார். காதல் மன்னன் படத்தில் 'உன்னை பார்த்த பின்பு நான்' என்ற பாடல் அஜித்திக்கும் சரி படத்துக்கும் சரி மிகப் பெரிய பலமாக அமைந்தது.
பாடகர் மட்டுமின்றி ஒரு நடிகராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். காதலன் உள்ளிட்ட படங்களில் பாசமுள்ள அப்பாவாகவும் அவ்வை சண்முகி படத்தில் டாக்டராகவும் கலக்கினார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு வளரும் கலைஞர்களுடன் அன்பாக பழகி அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் நல்ல ஆசானாகவும் இருந்தார்.
"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" : இப்படி எல்லா காலத்துக்கும் பொருத்திப் போன கலைஞனாக வாழ்ந்து மறைந்த அற்புத கலைஞன் எஸ்பிபி மறைந்தாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரது குரலும் அவர் பாடிய பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து வருகிறார். 'இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்'..என்று பாடிய எஸ்பிபி அனைவரது நினைவுகளிலும் மலர்ந்து கொண்டே தான் இருக்கிறார் என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! விக்ரமின் ஸ்டைலிஷ் காட்சிகள் வெளியீடு..