சென்னை: சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் "சிட்தி" (SIDDY). இந்தப் படத்தை பயஸ் ராஜ் (Pious Raj)எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவன் " சிட்தி " தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார்? இறுதியில் என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள். இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் என்றும், கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். நடிகர் ராம் சரண் தனது படம் தோற்றபோது, தயாரிப்பாளருக்கு ரூபாய் 15 கோடியைத் திருப்பி கொடுத்தார் என்றும், ராதே ஷ்யாம் படம் தோற்றதால், நடிகர் பிரபாஸ் அந்தப் படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பிக்கொடுத்தார் என்றும் கூறினார். இச்செயலால் அவர்களை வணங்குகிறேன் என்றும் தெரிவித்தார். வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நடிகர் ஆரியின் மனிதநேயம்: விழாவில் பேசிய நடிகர் ஆரி, நலிந்த தயாரிப்பாளருக்கு ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றும், இதே உதவியை நடிகர் சங்கத்திற்கும் செய்யத்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் சென்று படம் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : வெளியானது சன்னி லியோன் தமிழ்ப்பட போஸ்டர்!