சென்னை: இயக்குநர் அமீர், சூர்யா நடித்த மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை ஞானவேல் ராஜா முதல் காப்பி அடிப்படையில் தயாரித்திருந்தார்.
அப்படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநர் அமீருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தற்போது வரை வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஞானவேல் ராஜா, "இயக்குநர் அமீர் என்னை ஏமாற்றி பொய் கணக்கு காட்டி பல லட்சங்கள் சம்பாதித்து விட்டதாகவும், இதேபோல் பல தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாகவும், அவர் ஒரு திருடன்" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பியுள்ள நிலையில் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அமீர் அறிக்கை வாயிலாக பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுகுறித்து மேலும் எதுவும் பேச முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமீர் - ஞானவேல் ராஜா விவகாரத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார், அமீருக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "அண்ணன் அமீர் இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும் போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர்.
அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்போது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்" என்று காட்டமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமீர் - ஞானவேல் ராஜா விவகாரத்தில் சசிகுமாரை தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனியும், இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "பருத்திவீரன் பிரச்சினையில் உண்மை பேசினால் அது பலரது வாழ்க்கையில் புயலை கிளப்பும்" - இயக்குநர் அமீர் எச்சரிக்கை!