கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ராக்கி' திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான திரை மொழியை பதிவு செய்தது.
தமிழ்த்திரையுலகிற்கு அருண் மாதேஸ்வரன் எனும் திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்தியது. இயக்குநர் பாரதி ராஜா, வசந்த் ரவி, ரோஹினி, ரவீனா ரவி மற்றும் பலர் நடித்த இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும் , பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வன்முறை, பழிவாங்கும் உணர்வு, அன்பு, துரோகம், கர்வம் எனப்பல உணர்வுகளை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இந்தத் திரைப்படம் பதிவு செய்தது. விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்தைக் கொண்டாடினர். முதல் படத்தில் இவ்வளவு நேர்த்தியான படைப்பைத் தருவது அவ்வளவு எளிதல்ல என்றும் பாராட்டினர்.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. இயக்குநர் செல்வராகவன் நடித்த முதல் திரைப்படம் இது தான். ஆனால், இதற்கு முன்பே செல்வராகவன் முக்கியவேடத்தில் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிவிட்டது.
இருப்பினும் செல்வராகவனின் முழு நடிப்புத் திறனை அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்தில் வெளிக்கொண்டு வந்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று(ஏப்.22) இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
”பழிவாங்குறதுனா என்னனு தெரியுமா..?” என கீர்த்தி சுரேஷின் அழுத்தமான வசன நடையின் மூலம் தொடங்கும் இப்படத்தின் டீசர் அதனின் ஒவ்வோரு ஃப்ரேமிலும் தரமான திரைப்படத்திற்கான உத்திரவாதத்தை தருகிறது. அருண் மாதேஸ்வரனின் அலாதீயான திரை மொழி, ஒளிப்பதிவாளர் யாமினியின் நேர்த்தியான ஃப்ரேம்ஸ், செல்வராகவனின் திரை தோற்றம் என டீசரில் காட்டப்பட்ட அனைத்து விஷயங்களும் தரமான சினிமாவிற்கான கூறுகளாய்த் திகழ்கின்றன.
மேலும் ஒரு பழிவாங்கும் திரைப்படமான இந்தக்கதையை அருண் மாதேஸ்வரன் மீண்டும் தன் அற்புதத் திரைமொழியில் நம்மிடம் கடத்துவார் என நம்பலாம்.
இதையும் படிங்க: சூர்யாவை வைத்து படம் எடுக்கும் கே.ஜி.எப். தயாரிப்பாளர் !... இயக்குநர் யார் தெரியுமா?