நெல்லை: தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் ஆரம்பத்தில் நடிகர், வில்லன் என தொடர்ந்து குணச்சித்திர நடிகராக என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
குறிப்பாக நடிகர் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில், விஜயகுமார் நாட்டாமை கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பெயர் பெற்றார். ’நீதிடா, நேர்மைடா’ என்கிற இவரது வசனம் மிகவும் புகழ்பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில் நடிகர் விஜயகுமார் திருநெல்வேலி மாவட்டத்தில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது திடீரென உயிரிழந்துவிட்டதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவின.
அதேசமயம் நடிகர் விஜயகுமார் தரப்பிடம் கேட்டபோது, அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து நமது ஈடிவி பாரத் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மணிகண்டன் நடிகர் விஜயகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, ’நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது சென்னையில் தான் இருக்கிறேன். என்னைப் பற்றி தவறான செய்தி வெளியாகியுள்ளது. உயிருடன் இருக்கும் போதே இது போன்ற செய்தியை கேள்விப்படுவது மகிழ்ச்சி தான்’ என்று விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க:“தி ஆர்டிஸ்ட்” என்னும் தலைப்பில் விஜய் சேதுபதியின் காலண்டர் போட்டோ ஷூட்